தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றத்தால் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஏபிவிபி அமைப்பினர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதால், தேசிய செயலாளர் நிதி திருப்பாதி உள்ளிட்ட 35 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று ஏபிவிபி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் டாக்டர் சுப்பையா சண்முகம், சென்னை புழல் சிறையில் உள்ள நிதி திரிபாதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மாலை மாநில ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் சென்ற 5 பேர் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஆளுநர் அவர்களை சந்திக்கவில்லை.
டாக்டர் சுப்பையா சண்முகம், தற்போது சென்னை ராயப்பேட்டை புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அரசுப் பணியில் உள்ள ஒரு மருத்துவர் அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியான விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவு தொடரும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.