நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவருவதாகவும், வருமானம் குறைந்துவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ராகுல், “சாமானிய மனிதருக்கு அதிர்ச்சி: 7 மாதங்களில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 6.01 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “பணவீக்கம் அதிகரிக்கிறது, வருமானம் குறைகிறது என்பது இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், மக்களின் வேதனையையும் வலியையும் எப்படி அளப்பது? எத்தனை குடும்பங்கள் காய்ந்த ரொட்டியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன? எத்தனை குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்? எத்தனை பெண்களின் நகைகள் அடகுவைக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை பேரின் மகிழ்ச்சியை மோடி அரசு பறித்திருக்கிறது?” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கிரிஸில் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நகர்ப்புற ஏழைகள் ஜனவரி மாதத்தில் கடுமையான பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொண்டனர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.