தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று(பிப்.17) தனது 68வது பிறந்த நாளினை கொண்டாடுகிறார். பாஜகவுக்கான எதிரான புதிய அரசியல் அணி குறித்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் சந்திரசேகர் ராவ், அது குறித்த முக்கிய அறிவிப்பையையும் இன்று வெளியிடலாம் என்ற அரசியல் ஊகங்கள் தெலங்கானாவில் உலா வருகின்றன.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகௌடா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன், தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முக்கிய அம்சமாக, உத்தவ் தாக்கரே -சந்திரசேகர் ராவ் இடையிலான நேரடி சந்திப்புக்கு பிப்.20, நாள் குறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மகாராஷ்டிரா - தெலங்கனா முதல்வர்கள் மும்பையில் சந்தித்து மதிய உணவுடன் உரையாட திட்டமிட்டுள்ளதை, தெலங்கானா முதல்வர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
2014 மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவது தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்த இந்த அரசியல் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் சந்திரசேகர் ராவ், இந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் சந்திப்புகளில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார். இந்த வகையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உடனான சந்திப்பு மற்றும் இதர பாஜக எதிர்முகாம் ஏற்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகளை இன்று சந்திரசேகர் ராவ் வெளியிடலாம் என்ற ஊகங்கள் தெலங்கானாவில் எழுந்துள்ளன.