டெல்லி 'உப்கார்' திரையரங்க தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களின் மேல்முறையீடு தள்ளுபடி


'உப்கார்' திரையரங்கம்

டெல்லி 'உப்கார்' திரையரங்க தீ விபத்து வழக்கில் சாட்சியங்களை கலைக்க முற்பட்ட விவகாரத்தில், 7 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான திரையரங்க உரிமையாளர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், கிரீன்பார்க் உப்கார் திரையரங்கில், கடந்த 1997-ம் ஆண்டு, ஜூன் மாதம் 13-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்த விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் முறையாக திரையரங்கில் கடைபிடிக்கப்படாதது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசர வழியைக்கூட அடைத்து, லாப நோக்குடன் கூடுதல் இருக்கைகளை திரையரங்கில் அமைத்து இருந்ததும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், திரையரங்கு அதிபர்களான சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக திரையரங்கு அதிபர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 2 பேரும் ஏற்கெனவே சிறைவாசம் அனுபவித்த காலத்தை தண்டனை காலமாகவும், தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில், உப்கார் திரையரங்கு தீ விபத்து வழக்கில், ஆதாரங்களை சேதப்படுத்தியதாக, திரையரங்கு அதிபர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, திரையரங்கு அதிபர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இருவருக்கும் தலா ரூ.2.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

x