கடன் தள்ளுபடி; நகைகள் எப்போது வழங்கப்படும்?- அமைச்சரின் இனிப்பான செய்தி


அமைச்சர் சக்கரபாணி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், வரும் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்படும் என்று பிரச்சாரத்தில் அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சியான செய்தியை கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திமுகவும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிரச்சாரத்தில் அமைச்சர் சக்கரபாணி

இந்நிலையில்,தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் எனவும் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதன்படி, தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

நகர்ப்புற பகுதிகளில் எப்போது நகை திரும்ப வழங்கப்படும் என கேள்வி எழுந்த நிலையில், அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, "கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. கிராமப்பகுதிகளில் தற்போது அடகு வைத்த நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற பகுதிகளில் தேர்தல் விதிகளில் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் பிப்ரவரி 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்படும்" என்று கூறினார்.

x