தஞ்சை - குடமுருட்டி ஆற்றில் பாலம் கட்டும் சாரம் சரிந்து ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்


கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், மாத்தூர் குடமுருட்டி ஆற்றில் நேற்றிரவு பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட சாரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாத்தூர் - ஒத்தைக் கடை இடையே உள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல், நேற்றும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறி பணி செய்து வந்தனர். அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 5 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், நீடாமங்கலம், ராயபுரத்தைச் சேர்ந்த ராமன் (55) என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வமணி (36), நாகை மாவட்டம், பரவையைச் சேர்ந்த ராஜா (35), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் (33) உள்ளிட்ட நான்கு பேரை அங்குள்ளவர்கள் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.