பல்லாவரம்: உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பம்மல் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, திருவள்ளுவர் நகரைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் (26) என்பவா் தனது உடல் எடையை குறைக்க பல்லாவரம் அருகே பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான கருவிகள் இல்லாததது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் அகற்றப்பட்டது.
இந்நிலையில், போதிய அடிப்படை வசதி இன்றி அறுவை சிகிச்சை செய்ததால் இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாக மீண்டும் பிரச்சினையைக் கிளப்பி இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இதற்கு காரணமான அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாது அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் ஜி. ஆர்.ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கார்த்திக், புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் சலீம், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், புதுச்சேரி மாநில துணை செயலாளர் சேது செல்வம், தமிழ் மாநில குழு உறுப்பினர் சாந்தி, வடசென்னை மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ் வேம்புலி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.