‘தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது’


‘தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது’ என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் 117-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில், பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது மற்ற கட்சி வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை உள்ளதாக தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம்

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட எவருக்கும் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கு உத்தரவிடுகிறோம். அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால், அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தனியாருக்கு சொந்தமான சுவர்களில் அனுமதி பெற்றே போஸ்டர் ஒட்டப்பட வேண்டும். தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது. உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டக்கூடாது என விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுகிறோம்” என்று கூறியதோடு, மேற்கண்ட உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து வரும் 21-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் ஆணை பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

x