பஞ்சாப் தேர்தலும் குரு ரவிதாஸை வழிபடும் தலைவர்களும்!


‘குரு ரவிதாஸ் ஜெயந்தி’ தினமான இன்று, டெல்லியின் கரோல் பாகில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் தாஸ் கோயிலில் பிரதமர் மோடி வழிபட்டார். ஷபத் கீர்த்தனையில் பங்கேற்ற அவர், அங்கிருந்த பக்தர்களுடனும் கலந்துரையாடினார். ‘குரு ரவிதாஸின் வாழ்க்கை உத்வேகம் தரக்கூடியது’ என்று அங்குள்ள வருகையாளர் புத்தகத்தில் எழுதினார். அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்ட நிகழ்வின் காணொலியை, “மிகவும் சிறப்பான தருணங்கள்” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

“குரு ரவிதாஸ் காட்டிய பாதையைப் பின்பற்றி, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தைக் கட்டமைக்க நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ஆம் ஆத்மி அரசு இன்று விடுமுறை அறிவித்திருக்கிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்று மூடப்பட்டிருக்கின்றன.

பட்டியலினத்தைச் சேர்ந்த சீக்கிய ஆன்மிகத் தலைவரான குரு ரவிதாஸின் கீர்த்தனைகள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிபில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 1377-ல் உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் பிறந்தவர் எனக் கருதப்படும் ரவிதாஸ், சாதி பேதமின்றி அனைவருக்குமான சமத்துவம், கண்ணியம் காக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் இயங்கியவர். பக்தி இயக்கத்தை வழிநடத்தியவர். பாலினம், சாதி அடிப்படையிலான பிரிவினையை எதிர்த்தவர். மீரா பாய் பக்தி இயக்கத்தையும் ரவிதாஸ் வழிநடத்தினார்.

தள்ளிவைக்கப்பட்ட தேர்தல்

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 14-ல் ஒரேகட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தலை 6 நாட்களுக்குத் தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி கோரிக்கை வைத்தார். பிப்ரவரி 10 முதல் 16-ம் தேதிவரை, ஏறத்தாழ 20 லட்சம் பக்தர்கள் வாராணசிக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பலரால், பிப்ரவரி 14-ல் நடைபெறும் வாக்குப்பதிவில் பங்கேற்க முடியாது என்றும் சரண்ஜீத் சிங் சன்னி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங், வாராணசியில் உள்ள கோவர்தன்பூரில் உள்ள குரு ரவிதாஸ் கோயிலுக்கு இன்று அதிகாலையே சென்று வழிபட்டார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.

தேர்தல் காலங்களில் மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்த முறை எல்லா தலைவர்களும் குரு ரவிதாஸ் ஜெயந்தியை அனுசரிப்பதிலும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ஈடுபாடு காட்டுகிறார்கள். பஞ்சாப் தேர்தல் வாக்குப்பதிவு வரும் சனிக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது.

x