சென்னை சென்ட்ரல் உட்பட 21 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை சென்ட்ரல், அரக்கோணம் உட்பட 21 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி கொண்டு வருவதற்காக தெற்கு ரயில்வேயால் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இருசக்கர வாகனம், கார்களில் வரும் பயணிகள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு, ரயிலில் பயணிக்க வசதியாக அங்கு வாகன நிறுத்த வசதிகள் உள்ளன. கரோனா காலத்துக்குப் பிறகு, இந்த வாகன நிறுத்தங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மீண்டும் நியமனம் செய்யப்படவில்லை.

இதனால், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும் நடப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் கூடுதல் வாகன நிறுத்தம், அரக்கோணம், திண்டிவனம், எண்ணூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: "வாகன நிறுத்தம் வசதிக்கான, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் வருகை அதிகமாக உள்ள ரயில் நிலையங்களில் படிப்படியாக வாகன நிறுத்த வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, ஏற்கெனவே வாகன நிறுத்த வசதி இருந்து ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்யாமல் இருக்கும் ரயில் நிலையங்களையும் தேர்வு செய்து புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறோம்.

அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கார் வாகன நிறுத்த வசதி, பெரம்பூர் கேரேஜ் பணிகள், அரக்கோணம் சந்திப்பு, வாலாஜாபாத், கவரைப்பேட்டை, கொருக்குப்பேட்டை கூட்ஸ்ஷெட், வில்லிவாக்கம், திண்டிவனம், வாணியம்பாடி, திருமுல்லைவாயில், எண்ணூர், வேளச்சேரி பி பகுதி, திருவான்மியூர், அன்வர்த்திகான் பேட்டை, மேல்மருவத்தூர், அண்ணணூர், பெரம்பூர் தெற்கு பகுதி, நாயுடுபேட்டை, ஆம்பூர், சேத்துப்பட்டு, பெருங்குடி ஆகிய ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதிக்காக ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.

அடுத்த சில மாதங்களில் ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்து வாகன நிறுத்த வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம்." இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

x