மக்களுக்காகத் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் அல்ல! - ஓபிஎஸ்


ஓபிஎஸ்

“மக்களுக்காகத் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல” என்று கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், “கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்க்காமல் திமுக அரசு மவுனம் சாதித்து வருவதைப் பார்த்தால், இத்திட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவுகளை சேமிக்க அணுக்கழிவு மையம் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அணுஉலைக் கழிவு மையம் அமைக்கப்பட்டால், வெளிமாநில அணுமின் கழிவுகளைகூட சேமிக்கும் அபாயம் உள்ளது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைந்தால், தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஆபத்து என சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுஉலை

அணுக்கழிவு மையம் அமைப்பதை ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து பெறப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதோடு, ஒன்றிய தொகுப்புக்கு 15 விழுக்காடு மின்சாரம் செல்கிறது. அணுமின் உலைகள் ஆபத்தானவை என்ற நிலையிலும், அணுமின் உலைகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. இதன்மூலம் பிற மாநிலங்கள் பயனடைகின்றன.

இந்தச் சூழ்நிலையில் அணுக் கழிவுகளை சேமிப்பதற்கான ஏஎஃப்ஆர் மையத்தையோ அல்லது ஆழ்நில அணுக்கழிவு மையத்தையோ தமிழ்நாட்டுக்கு வெளியில் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மக்களுக்காக திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல. கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு மையத்துக்கான இடம் தேர்வு செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்துள்ளது. கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு மையம் அமைப்பதை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

x