ஈபிஎஸ் நண்பர் இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!


எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் பம்பரம்போல் சுழன்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நாகசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம் என 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 வார்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. சேலம் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் அதிமுக ஏற்கெனவே பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிலும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக சேலம் இருப்பதால், இந்த முறையும் அதிமுக அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்றும் சேலம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றும் கடந்த 10,11,12,13 ஆகிய நாட்களில் சேலத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து எடப்பாடி பழனிசாமி நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவனின் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையையொட்டி அங்கு அதிமுகவினர் குவிந்துள்ளதால், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான, தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

x