9.28 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்!- தேர்தல் பறக்கும் படை அதிரடி


மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இதுவரை 9.28 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுக்க முயலும் கட்சியினரை தேர்தல் பறக்கும் கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பணம், பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன.

கடந்த மாதம் 28ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை 6 கோடியே 89 கோடி ரூபாய் பணம், ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இதுவரை 9 கோடியே 28 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

x