பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு


சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. விண்ணப்ப பதிவு கடந்த மே 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன் எப்போதும் இல்லாதஅளவுக்கு ஆசிரியர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும்போது எமிஸ் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறுஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசமானது மே25 வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை பின்னர் வெளியிடப்படும். அதேபோல், பொது மாறுதலில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது