“தேர்தல் வந்த உடன், திமுக அரசு கண்டிப்பாக காவல் துறை மூலமாக தன்னை விசாரணைக்கு அழைத்து ஏதாவது முடக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும்” என ரூ.110 கோடி வைப்புத்தொகை பணம் முடக்கத்துக்கு முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.
தமிழகத்தில் எதிர்வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுகிறது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கூடலூர், உதகை மற்றும் குன்னூரில் நடந்த பிரச்சார கூட்டங்களில் எஸ்.பி.வேலுமணி பேசினார். உதகை ஏடிசியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் நடந்த கூட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, வேலுமணி பேசியதாவது: “திமுக அரசு பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக அரசு விட்டுச் சென்ற திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தல் வந்தால் மக்கள் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள்.
நகராட்சி கடைகள் வாடகை விவகாரத்துக்கு தீர்வு ஏற்பட அதிமுக தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவிக்கு வர வேண்டும். நீலகிரியில் தேர்தல் நடக்கும் 294 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “தேர்தல் வந்த உடன் திமுக அரசு கண்டிப்பாக காவல் துறை மூலமாக என்னை விசாரணைக்கு அழைத்து ஏதாவது முடக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியபோது தனது வீட்டிலிருந்தோ, தனக்கு சம்பந்தபட்டவர்களின் வீட்டிலிருந்தோ பணமோ, எந்த ஆவணங்களை கைபற்றவில்லை. திமுக அரசு தேர்தல் சமயம் பார்த்து இதுபோன்று டெபாசிட் தொகை ரூ.110 கோடி முடக்கி உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அதிமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தவே, தனது நெருங்கிய நண்பர்களின் நிறுவனங்களின் ரூ.110 கோடி டெபாசிட் தொகை முடக்கி உள்ளனர். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். அதிமுகவைச் சார்ந்த யாராவது தவறு செய்தால் அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று தவறாக விளம்பரம் செய்யப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை காவல் துறை வாகனத்தைப் பயன்படுத்தி விநியோகம் செய்யும் சூழ்நிலை உள்ளது. காவல் துறையை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.