தேர்தல் கோதாவில் ‘உ.பி வீரப்பன்’ தத்துவாவின் வாரிசு!


பூலன் தேவி

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையில் அமைந்த பகுதி புந்தேல்கண்ட். இதனுள் அமைந்த சம்பல் பள்ளத்தாக்கு, அதனை புகலிடமாக்கிய கொள்ளைக்காரர்களால் புகழடைந்தது. இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய உயர்குடி வகுப்பினரை எதிர்த்து பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிலர் ஆயுதங்கள் ஏந்தி கொள்ளைக்காரர்களாக மாறினர். இதில், உபி, மபி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள், சம்பல் பள்ளத்தாக்கில் பல கொள்ளைக் கும்பல்களை அமைத்தனர்.

உ.பி-யின் வீரப்பன் ’தத்துவா’

இவர்களில் முக்கியமான சம்பல் கொள்ளையர் ’உ.பி வீரப்பன்’ எனப் பெயரெடுத்த, ’தத்துவா’ எனப்படும் ஷிவ்குமார் சிங் பட்டேல். 2007இல் முதல்வர் மாயாவதி ஆட்சி காலத்தில் அதிரடிப்படை என்கவுண்டரில் தத்துவா கொல்லப்பட்டார். இங்குள்ள தேவ்காலி கிராமத்தில் பிறந்த தத்துவா, குர்மி சமூகத்தை சேர்ந்தவர். 1975இல் முதல் கொலையை நிகழ்த்தியவர், சம்பல் பள்ளத்தாக்கின் முக்கிய கொள்ளைக்காரனாக உருவெடுத்தார். தத்துவா மீது கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், உபி காவல்துறையினரிடம் தத்துவாவின் புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை. இதற்கு, சம்பல் பள்ளத்தாக்குப் பகுதி கிராமவாசிகளின் நாயகனாக தத்துவா திகழ்ந்ததே காரணமானது.

சம்பல் பள்ளத்தாக்கு

இதனால், புந்தேல்கண்டின் பாந்தா, சித்ரகுட், மஹோபா மாவட்டங்களில் தத்துவாவின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. தத்துவாவை போல் பல கொள்ளைக்காரர்களுக்கு இருந்த செல்வாக்கினால், அவர்கள் கைகாட்டும் அரசியல்வாதிகளுக்கு கிராமவாசிகள் வாக்களிப்பது வழக்கமானது. இதற்கு மறுப்பவர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளைக்காரர்களால் மிரட்டப்பட்டனர். இத்தகைய செல்வாக்கு 1975 முதல் சுமார் 30 வருடங்களுக்கு, சம்பலின் கொள்ளயர்களுக்கு தொடர்ந்தன. அரசியல்வாதிகள் - சம்பல் கொள்ளைக்காரர்கள் இடையே பரஸ்பர லாபக்கணக்குகள் ஏராளம் இருந்தன. இந்த நெருக்கத்தால் பல கொள்ளையர்களின் உறவுகளும், நட்புகளும் கூட அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தனர்.

இந்தவகையில், உபி வீரப்பனான தத்துவாவின் மகன் வீர்சிங் பட்டேல், முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியில் இணைந்தார். சித்ரகுட் கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர், ஒருமுறை சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு மாணிக்பூர் எம்எல்ஏவானார். வீர்சிங் பட்டேலுக்கு, சித்ரகுட் மாவட்டத்தின் மாணிக்பூர் தொகுதியின் வேட்பாளராக இம்முறையும் வாய்ப்பு தந்துள்ளார் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ். வீர்சிங்கின் மறைந்த தந்தை தத்துவா குறித்த திகில் இன்னும் கூட அப்பகுதியில் நீடிக்கிறது. சொந்த சமுதாயத்தினரான குர்மிக்கள், தத்துவாவிற்கு அப்பகுதியில் ஒரு கோயிலும் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

மாணிக்பூரின் சமாஜ்வாதி வேட்பாளர் வீர்சிங் பட்டேல்

அரசியலை அறிமுகப்படுத்திய பூலன்தேவி

இதுபோல், சம்பல் கொள்ளைக்காரர்களுக்கு அரசியல் வாசல்களை காட்டியவர், சமாஜ்வாதியின் எம்பியாக இருந்த பூலன்தேவி. இவர், டெல்லி அரசு குடியிருப்பில் தங்கியிருந்தபோது, ஒருநாள் நாடாளுமன்ற கிளம்பும் போது வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். புந்தேல்கண்டின் பேமாய் கிராமத்தின் 22 தாக்கூர் சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் அமைந்தது. முன்னதாக, இந்த தாக்கூர்களால் பல கொடுமைகளுகு ஆளான பூலன்தேவி, 1981இல் கொள்ளைக்காரியாக தனது பேமாய் கிராமத்துக்கு திரும்பி வந்து, மேற்படி 22 பேர்களையும் நிற்கவைத்து சுட்டுக் கொன்றார். அதன் பின்னர், 1983இல் சரணடைந்த பூலன்தேவியின் சம்பல் பள்ளத்தாக்கு புகழ், வட மாநிலங்களைத் தாண்டி உலகம் முழுவதிலும் பரவியது.

தேர்தலில் மிரட்டிய முன்னாள் கொள்ளையர்கள்

சமாஜ்வாதி எம்பியான பூலன்தேவி வரிசையில், முன்னாள் சம்பல் கொள்ளையர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட்டனர். மபியில் மொஹர்சிங் குஜ்ஜர், பாஜக சார்பில் பிந்த் மாவட்டம், மெஹ்காவ்ன் முனிசிபல் நகராட்சியின் தலைவராக இருந்தார். இன்னொரு முன்னாள் கொள்ளையரான பிரேம்சிங், 2013இல் காங்கிரஸ் எம்எல்ஏவாக மபியின் சத்னா தொகுதியில் உலா வந்தார். மல்கான்சிங் என்பவர், பாஜக, சமாஜ்வாதி, முலாயம்சிங்கின் சகோதரர் ஷிவ்பால் சிங்கின் புதிய கட்சி மற்றும் சுயேச்சையாகவும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு போட்டியிட்டார். இந்த வரிசையில், தற்போதைய வீர்சிங் பட்டேல் போன்று சரணடைந்த கொள்ளைக்காரர்களின் வாரிசுகளும் தனியாக நீண்ட பட்டியல் அளவுக்கு இடம் பெற்றுள்ளனர்.

ராம்சிங் பக்கட் தனது சகக்கொள்ளைக்காரி குஸ்மாநைன் உடன்

யாருடைய கொள்ளைக் கும்பல் பெரியது என்பதிலும், கொள்ளை எல்லைகளை வகுப்பதிலும் கொள்ளையர் மத்தியிலான மோதல்கள், அப்பகுதியை அவ்வப்போது குண்டு சத்தங்களால் திகிலடைய வைக்கும். 3 மாநிலப் போலீஸார் கூட்டுசேர்ந்தும், சம்பல் கொள்ளைக்காரர்களில் பலரையும் பிடிக்க முடியாமல் இருந்தது. இந்த பட்டியல் பூலன்தேவி, மல்கான்சிங், மொஹர்சிங் குஜ்ஜர், கப்பர்சிங் கத்தரியா, மான்சிங், நிர்பய்சிங் குஜ்ஜர், பான்சிங் தோமர், ஜக்ஜீவன் பரிஹார், ராம்பாபு கத்தரியா என நீண்டிருந்தது.

முன்னாள் கொள்ளையர் மல்கான்சிங்

சாம்பலில் ஓய்ந்த குண்டு சத்தம்

சம்பல் கொள்ளைக்காரர்களின் புகழ் பாலிவுட், உட்பட பல திரைப்படங்களிலும் பரவியது. உண்மை சம்பவங்களை மையமாக்கி, ‘ஷோலே’, ’மான்சிங் தோமர்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருந்தன. 2007ஆம் ஆண்டில் தனது பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த தனி மெஜாரிட்டியில் முதல்வரானார் மாயாவதி. அப்போது இவர் தொடங்கி வைத்த பல்வேறு நடவடிக்கைகளால், கொள்ளைக்காரர்கள் குறையத் தொடங்கினர். மேலும், கைப்பேசிகள் உள்ளிட்ட நவீன வசதிகளால் அதிகரித்து விட்ட போலீஸாரின் கண்காணிப்பிலிருந்து, பழமையில் ஊறிய சம்பல் கொள்ளையரால் தப்பிக்க முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் சம்பல் பள்ளத்தாக்கில் எதிரொலித்த துப்பாக்கி குண்டுச் சத்தம் தற்போது ஓய்ந்து போயிருக்கின்றன.

x