சேர்மன் டூ எம்எல்ஏ; எம்எல்ஏ டூ கவுன்சிலர்!


முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23-வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி போட்டியிடுகிறார்.

கடந்த 2016 - 2021 வரை திருச்செங்கோடு எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். அதற்கு முன் 2011-2016 வரை திருச்செங்கோடு நகராட்சி சேர்மனாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கி தோல்வியைத் தழுவினார்.

தற்போது சேர்மன் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. கவுன்சிலர்கள் சேர்மனை தேர்வுசெய்ய வேண்டும். அதனால் அனைவரும் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னரே, சேர்மனாக வர முடியும். ஆனால், கடந்தமுறை சேர்மன் பதவிக்கான தேர்தல் நேரடியாக நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போட்டியிட்டு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டவர் பொன்.சரஸ்வதி. தற்போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வாக்குசேகரிப்பில்...

இவர், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பல்வேறு காரணங்களை திருச்செங்கோடு நகர அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். அதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அதிமுக தனித்து களம் இறங்கியிருப்பதால் வார்டில் போட்டியிட ஆள் கிடைக்கவில்லை. அதனால் பொன்.சரஸ்வதி கவுன்சிலர் பதவிக்கு களம் இறங்கியுள்ளார். மற்றபடி அவருக்கு எந்தப் பதவி ஆசையும் இல்லை என, திருச்செங்கோடு நகர அதிமுகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் சேர்மன், எம்எல்ஏவாக இருந்தாச்சு. பதவியில்லாம இருக்க முடியல. அதனால் எப்படியாவது சேர்மனாகிவிட வேண்டும் என்ற கனவில், தான் ஒரு முன்னாள் சேர்மன், எம்எல்ஏ என்பதையெல்லாம் மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, கவுன்சிலர் பதவியைப் பிடிக்க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் எனவும் நகர அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு தரப்பு தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் அவர் கணவர் பொன்னுசாமிதான் 23-வது வார்டுக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். தோல்வி பயம் காரணமாக முன்னாள் எம்எல்ஏவாக இருந்தாலும் பரவாயில்லை என தனது மனைவி பொன்.சரஸ்வதியை வார்டு கவுன்சிலர் பதவிக்கு களம் இறக்கிவிட்டு, வழக்கம்போல் பின்னால் இருந்து அவர் வேலை பார்த்து வருகிறார். கணவரால் தான் முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார் எனவும் நகர அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கடைசியாக, தேர்தலில் செலவு செய்ய ஆளில்லை. தான் களத்தில் இருந்தால்தான் அனைவரையும் கட்டிமேய்க்க முடியும். எனவேதான் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் பொன்.சரஸ்வதி.

இந்த விளக்கங்களை எல்லாம் கேட்கும் திருச்செங்கோடு நகர மக்கள், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என கவுண்டமனியின் காமெடியை கூறிக் கலாய்க்கின்றனர்.

x