“2016-லேயே பெகாசஸைப் பயன்படுத்தினார் மம்தா” - பாஜக பகீர் புகார்


மம்தா பானர்ஜி

பெகாசஸ் வேவு மென்பொருள் விவகாரத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்குத் தொடர்பு இருப்பதாக, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. இதன் அடிப்படையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்துவருகின்றன. இந்நிலையில், இந்த வேவு மென்பொருளை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 2016 முதல் பயன்படுத்திவருவதாக பாஜகவைச் சேர்ந்த அநிர்பன் கங்கூலி கூறியிருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்ற சுவெந்து அதிகாரி, பாஜகவில் கடும் அழுத்தத்தைச் சந்திப்பதால் மீண்டும் திரிணமூலுக்குத் திரும்புவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறியதற்கும் அநிர்பன் கங்கூலி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான அநிர்பன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.

அநிர்பன் கங்கூலியின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்று (பிப்.11) பேசிய அவர், “சுவெந்து அதிகாரி பாஜகவைவிட்டு வெளியேற விரும்புகிறார் என்று குணால் கோஷுக்கு எப்படித் தெரியவந்தது? அவரது தொலைபேசி உரையாடலை குணால் கோஷ் ஒட்டுக்கேட்டாரா? தொலைபேசியை ஒட்டு கேட்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெகாசஸைப் பயன்படுத்துகிறது என்று நம்புகிறேன். 2016 முதல் மம்தா பானர்ஜி பெகாசஸைப் பயன்படுத்திவருகிறார். அவர் தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்திருந்தால், அவற்றை ஏன் வெளியிடவில்லை? திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்கிறது என இதிலிருந்தே தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.

2017 ஜூலையில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் கடற்கரையில் உலவினார். இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டது, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது வரை பல தகவல்கள் தலைப்புச் செய்திகளாகின. ஆனால், அந்தச் சமயத்தில்தான் பெகாசஸ் வேவு மென்பொருளை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்கிறது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான கட்டுரை.

ஆனால், 2016-லேயே மம்தா பெகாசஸைப் பயன்படுத்தினார் என்று அரிய தகவலைச் சொல்லியிருக்கிறார் அநிர்பன் கங்கூலி!

x