மேற்கு வங்க ரயில் விபத்து முதல் சசிகலாவுக்கு கதவடைக்கும் அதிமுக வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து:மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் விபத்து நேர்ந்தது எப்படி? சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதாக ரயில்வே கூறியுள்ளது. இதுவே, விபத்துக்கான காரணமாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக பழுதான சிக்னலில், ஒரு ரயிலுக்குப் பின் செல்லும் மற்றொரு ரயில் செல்லும்போது 10 கி.மீ வேகத்திலேயே ஒவ்வொரு சிக்னலையும் கடக்க வேண்டும். ஆனால், இந்த விபத்துக்கு முன்னதாக சரக்கு ரயில் இந்த விதிமுறையை மீறியதாக சொல்லப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

ரயில் விபத்து: நிவாரண நிதியுதவி அறிவிப்பு: மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: “கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.

இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இந்த சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துகள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பினார்.

ஜார்க்கண்ட்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் ஜார்க்கண்டில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது.

இவிஎம் - பாஜக Vs காங்கிரஸ்: “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு, இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர், “எலான் மஸ்க் சொல்வது தவறானது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அவர் நினைப்பது போல இதனை ஹேக் செய்ய முடியாது. உலகில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு எதுவும் இருக்க முடியாது என சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால், டெஸ்லா கார்கள் அனைத்தையும் ஹேக் செய்யலாம், வானூர்தி, ராக்கெட், கால்குலேட்டர் போன்றவற்றை ஹேக் செய்யலாம் என சொல்வது போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசுக்கு வலியுறுத்தல்: “சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தமைக்காக எங்களது அலுவலகத்தை மிகக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

‘அதிமுகவில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது’:“சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா? அதனால் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று கூறினார்.

அதிமுக மீது தினகரன் விமர்சனம்: இதனிடையே, “இடைத்தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. நாங்கள் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். மக்கள் விரோத திமுகவுக்கு பாடம் புகட்டவே இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம். மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை என்பதற்காக அவர்களைப் பிடித்து இழுத்து வர முடியாது. தோல்வி பயத்தாலும், திமுகவை வெற்றிபெற வைக்கவும் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி ஒதுங்கி கொண்டார்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாக். கேப்டன் குறித்து சேவாக் கருத்து: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் டி20 அணியில் இடம் பிடிப்பதற்கான தகுதி, பாபர் அஸமுக்கு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

x