தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பணி நியமனத்தில், வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை ரத்துசெய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிக்காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டில் அறிவிப்பு வெளியானது. இந்த நியமனத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி பழனியப்பன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ‘‘வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘உள் இடஒதுக்கீடு அடிப்படையில் நடந்து முடிந்துள்ள பணி நியமனங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். பிப்.15 வரை புதிய நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது’ என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். அறிவிப்பை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தனி நீதிபதி ஏற்கெனவே விசாரித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், “பொதுவாகக் கல்வி நிறுவனங்களில் காலியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. அதேநேரத்தில் அந்த நியமனங்கள் சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல்முறையீடு மனுவைத் திரும்பப் பெறுவதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை அனுமதிக்க மறுத்து, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.