தமிழகத்தில் பிப்.16 முதல் மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்கவும், பொருட்காட்சிகளை நடத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து முதற்கட்டமாக கல்லூரிகள், 9 முதல் 12 வகுப்புவரை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 8 வகுப்புவரை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கபட்டது. இருப்பினும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
சமீபத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்த கரோனா தொற்று தற்பொழுது படிப்படியாக குறைந்ததை அடுத்து, இன்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் கட்டுப்பாடுகளுடன் கூடிய பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் பிப்.16 முதல் மார்ச் 2 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும். திருமணம் மற்றும் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவிர்த்து, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நர்சரி பள்ளிகள் (LKG, UKG), மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முன்னறிவிப்பாகத்தான் பிப்.16 முதல் சென்னை 45-வது புத்தகக் காட்சி தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.