கோயில் தேர் திருவிழாக்களின்போது அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கோயில் தேர் திருவிழாக்களின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோயிலி்ல், கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்த்திருவிழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார்.

தேபோல தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக்களின்போதும் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தேர் திருவிழாக்களின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கண்டிப்புடன் முறையாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர் திருவிழாக்களின் போது ஏற்படும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோயில் தேர் திருவிழாக்களை முறையாக நடத்த அரசு வகுத்துள்ள விதிகளை அனைத்து அதிகாரிகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தேர் திருவிழா நேரங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

x