கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதித்திடுக: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை


கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தின் ஒரு பகுதி (கோப்புப் படம்)

பொள்ளாச்சி: மண்பாண்டங்கள் தயாரிக்க கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மண்பானை, கார்த்திகை விளக்கு, உருவார பொம்மைகள் மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவையான பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இப்பகுதி மக்கள் கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

மாவட்ட நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை மண் எடுக்க வழங்கும் அனுமதியை பயன்படுத்தி களிமண் எடுத்து மண்பாண்டங்கள் செய்கின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு தாலுக்காவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கோதாவடி குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க முடியும் என அண்மையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு தாலுகாவைச் சேர்ந்த மண்பாண்ட
தொழிலாளர்களும் கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தெலுங்கு குலாலர் மண்பாண்ட தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் துறைக்கு மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நாங்கள் மண்பாண்ட தொழிலை குலத்தொழிலாக செய்து வருகிறோம். இந்த தொழிலுக்கு மூலப்பொருளான களிமண் ஆண்டுதோறும் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் குயவன் குட்டை என்னும் இடத்தில் எடுத்து வருகிறோம். தற்போது களிமண் இல்லாததால் மண்பாண்டம் உற்பத்தி பாதித்துள்ளது. எனவே நடப்பாண்டும் குயவன் குட்டை என்னும் இடத்தில் இலவசமாக களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் துணைத் தலைவர் காளிதாஸ், “கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், பல தலைமுறைகளாக கோதவாடி குளத்தில் குயவன் குட்டை பகுதியில் மண் எடுத்து வருகிறோம். தற்போது அந்தந்த தாலுகாவில் வசிப்போர்க்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று, அரசின் உத்தரவுப்படி அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய நடைமுறையை மாற்றி உள்ளதால், சூலூர் பகுதி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சூலூரில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் உள்ளதால், களிமண் எடுக்க முடியாது. கோதவாடி குளத்தின் மண்தான் பொம்மைகள் செய்ய ஏதுவாக இருக்கும். எனவே ஆண்டுக்கு ஒரு யூனிட் மட்டுமே களிமண் வழங்கும் நிலையில், தற்போது அந்த மண்ணும் கிடைக்காத சூழல் உள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இது குறித்து அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.