தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து இளைஞர் காயம்


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததில் இளைஞர் காயமடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 400 வீடுகள் உள்ளன. இங்கு பல வீடுகள் முறையான பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குடியிருப்பில் 1-வது பிளாக்கில் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஆதிராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு ஆதிராஜின் மகன் அருண் பாண்டியன் வீட்டின் உள்பக்க அறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கட்டில் மீது விழுந்தது. இதில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அருண் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சேதமடைந்துள்ள வீடுகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.