உபி முதல்கட்ட தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் சமாஜ்வாதி


வாக்குப்பதிவு

இன்று உத்தரப் பிரதேசத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவில் சமாஜ்வாதிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இக்கூட்டணிக்கு, கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் இந்த மேற்குப்பகுதியின் 58 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளே கிடைத்திருந்தன.

உபியில் மொத்தம் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் 403. இதில் 11 மாவட்டங்களின் 58 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜாட் மற்றும் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட இத்தொகுதிகளில் சமாஜ்வாதி கூட்டணிக்கு வெறும் 3 எம்எல்ஏக்களே உள்ளனர்.

அகிலேஷ்சிங் தலைமையிலான சமாஜ்வாதியுடன், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி(ஆர்எல்டி) கூட்டணி வைத்திருந்தது. இதில், 2017 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணியின் வேட்பாளர்கள் 14 தொகுதிகளில் 2-வது இடம் பெற்றிருந்தனர். 24 தொகுதிகளில் மூன்றாம் நிலை கிடைத்திருந்தது. இதற்கும் முன்பாக 2012-ல் சமாஜ்வாதி உபியில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருந்தது. அந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணிக்கு இந்த 58 தொகுதிகளில் 19 கிடைத்திருந்தன.

சமாஜ்வாதி

இந்தச் சூழல், 2017-ல் முற்றிலுமாக பாஜகவுக்கு சாதகமாக மாறி இருந்தது. ஆக்ரா, அலிகர் மற்றும் மதுராவிலிருந்த 22 தொகுதிகளில் பாஜக 21 பெற்றிருந்தது. இந்த 11 மாவட்டங்களில் 58 தொகுதிகளில் பாஜக மொத்தம் 53-ல் வெற்றி அடைந்திருந்தது. இந்த ஆதரவு இந்தமுறை தேர்தலில் பாஜகவுக்கு கேள்விக்குறியாகி விட்டது.

இங்குள்ள விவசாயிகளான ஜாட் சமூகத்தினர், டெல்லியின் விவசாயப் போராட்டத்துக்குப் பின்பு, பாஜகவுக்கு எதிராகத் திரும்பிவிட்டதாகக் கருதப்படுகிறது. முஸ்லீம்களும் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என நம்பப்படுவதால், சமாஜ்வாதி கூட்டணி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கு அக்கட்சியின் முக்கியக் கூட்டணியான ஆர்எல்டி, ஜாட் ஆதரவுக் கட்சியாக இருப்பதும் காரணம்.

உபியின் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள மாவட்டங்களில் முக்கியமாக முசாபர்நகரும், ஷாம்லியும் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் கடந்த 2013-ல் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பல ஆயிரம் பேர் தம் வீடுகளை இழந்தனர். அப்போது, உபியில் சமாஜ்வாதி ஆட்சியின் முதல்வராக அகிலேஷ்சிங் யாதவ் இருந்தார். இதன் அடுத்த ஆண்டான 2014 மக்களவை தேர்தலில், பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி அலை உபியிலும் வீசியது. எனவே, தற்போது பாஜக ஆளும் உபியின் ஆட்சிக்கு எதிரான வாக்குகளும் தமக்கு கிடைக்கும் என சமாஜ்வாதிக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலை

இன்று முதல்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரையில், முசாபர்நகர் மற்றும் ஷாம்லியில் 57.79 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதில், ஷாம்லியில் பதிவான வாக்குகள் சதவிகிதம் முதல்கட்ட தேர்தலின் அனைத்து தொகுதிகளைவிட அதிகம். கவுதம்புத்நகர் மாவட்டத்தின் நொய்டாவில் மிகக்குறைவாக வெறும் 30 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. டெல்லிக்கு அருகிலுள்ள இந்த நொய்டாவில், சுமார் ஒன்றரை லட்சம் வாக்காளர்கள் பங்களாக்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

x