அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி வாபஸ் பெறப்படுமா? - வணிகர்களின் எதிர்பார்ப்பு


மதுரை: அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி வாபஸ் பெறப்படுமா என வணிகர்கள் எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்லியில் வரும் 22-ம் தேதி 53-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு முன் தங்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டு அறிய வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கு முன் வணிகர்களின் கருத்துக்களை கேட்டு கவுன்சில் கூட்டம் நடைபெறாத நிலையில் வணிகர்கள் கோரிக்கைக்கு எந்தளவுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என்பது தெரியவில்லை.

இந்த சேவை வரி குறைகளை சீர் செய்ய வசதியாக அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவும் அதி்காரிகள் கொண்ட ஒரு குழுவும் அமைத்தால் வணிகர்கள் நேரடியாக வந்து கோரிக்கைகளை வழங்க தயாராக உள்ளதாகவும், இந்தக் குழுவில் தமிழக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டால் அதிக வருவாய் வசூல் செய்வதற்கும், நியாயமான குறைகளை தெரிவிக்கவும் வசதியாக இருக்கும் எனவும் வணிகர்கள்
கூறுகிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்கம் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், தலைவர் வேல்சங்கர் ஆகியோர் கூறியதாவது: வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு, சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். அதற்காக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு திருத்தம் செய்ய வேண்டிய பொருட்கள் பட்டியல், அதன் வரி விகிதங்கள் மற்றும் மாற்றப்பட வேண்டிய வரி விகிதத்தை அனுப்பி உள்ளோம்.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் 25 கிலோவுக்கு கீழ் இருந்தால் 5 சதவீதம் வரி உள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் எத்தனை கிலோ பேக் இருந்தாலும் வரி விதிக்கக்கூடாது. வறுத்த நிலக்கடலைக்கு 12 சதவீதம் வரி உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். செங்கலுக்கு 6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உள்ளது. இதனை 3 முதல் 5 சதவீதமாக வரை குறைக்க வேண்டும். உரம், பூச்சிக் கொல்லி மருந்து நுண்ணூட்ட உரங்கள் உள்ளிட்டவை முறையே 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் ஆகிய அளவில் வரி விகிதம் உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

18 சதவீதம் வரி உள்ள கற்பூரத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். உலர் பழங்கள் 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ரஸ்க்கிற்கு 5 சதவீதம், புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஈர இட்லி, தோசை மாவுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப் பட்டுள்ளது. இந்த வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். வெண்ணெய் மற்றும் நெய்க்கு 12 சதவீதம் வரி உள்ளது. அதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். 18 சதவீதம் வரி உள்ள பிஸ்கட் வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வற்றல் வகைகளுக்கு உள்ள 5 சதவீதம் வரியை ரத்து செய்ய வேண்டும்.

அட்டைப் பெட்டிகளுக்கு உள்ள 18 சதவீதம் வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். நூடுல்ஸுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலான காரணத்தனால் பல பொருட்களுக்கு வரி விகிதமும் தெரியாத காரணத்தினால் சில குளறுபடிகளால் வரி செலுத்த வேண்டி உள்ளது. இதை தவிர்க்க முதல் 5 ஆண்டுகளுக்கு திட்டமிடாமல் ஏற்பட்ட தவறுகளுக்கு வரியோ, அபராதமோ விதிக்கக்கூடாது.

பருத்தி, பஞ்சு வியாபாரிகள் சரக்கு மற்றும் சேவை வரிசட்டப்படி பதிவு செய்து வணிகம் செய்து வருகிறார்கள். வேளாண் விளைபொருளான பருத்தியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அதை பதிவு பெற்ற வணிகர்களுக்கு அப்படியே விற்பனை செய்வது அல்லது அரவை செய்து பஞ்சாகவும் பருத்தி விதையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி விற்பனை செய்யும்போது அதற்குண்டான விற்பனை தொகைளுக்கு 5 சதவீதம் வரியை முறையாக செலுத்தி மாதாமாதம் ரிட்டர்ன் சமர்பித்து வருகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பருத்திக்கு ஆர்சிஎம் (RCM) முறையில் வரி செலுத்த வேண்டும் என்ற விவரம் பல வணிகர்களுக்கு தெரியவில்லை. மாநில வணிக வரித்துறையிலும் எந்த வித அறிவுரையும் வழங்கவில்லை. ஆர்சிஎம் இருப்பது தெரிந்திருந்தால் கொள்முதலுக்கு செலுத்தி விற்பனை செலுத்தும் வரிக்கு உள்ளீட்டு வரி எடுத்துக் கொண்டு மீதி வரி செலுத்தி இருப்பார்கள். ஆனால், முழு விற்பனை தொகைகளுக்கு முறையாக வரி செலுத்தி விட்டார்கள். அரசுக்கு எந்த வித இழப்பும் கிடையாது. அறியாமல் செய்த தவறுக்கு தங்கள் முதலீட்டை விட அதிக அளவில் அபராதம், வட்டி என்ற செலுத்த அறிவிப்பு வந்துள்ளது.

இதனால் வணிகர்கள் நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலை வந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசுக்கு எந்த வித இழப்பும் இல்லாதப் பட்சத்தில் விற்பனை தொகைக்கு வரி முறையாக செலுத்தி இருந்தால் ஆர்சிஎம், தண்டத்தொகை, வட்டி ஆகியவை விதிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.