நீலகிரியில் கவுன்சிலர் தேர்தலே நடந்திராத கிராமம்; போட்டியின்றித் தேர்வான ஓய்வுபெற்ற ஆசிரியர்


வேட்புமனுத் தாக்கல்

நீலகிரி, அதிகரட்டி பேரூராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட கோடேரி மலைக் கிராமத்தில், இதுவரை உள்ளாட்சி கவுன்சிலர் தேர்தலே நடைபெற்றதில்லை. இம்முறை நடைபெற உள்ள தேர்தலில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சு.மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் இருக்கும் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில், அதிகரட்டி, கேத்தி, பிக்கட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

இதனால், நகராட்சிகளில் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் பேரூராட்சிகளிலுள்ள 183 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. மனுக்கள் தள்ளுபடி, மனுக்களைத் திரும்பப் பெற்றது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின், தற்போது 1,253 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

போட்டியின்றி தேர்வான 3 சுயேச்சை வேட்பாளர்களில் அதிகரட்டி 12-ம் வார்டில் தேர்வாகியுள்ள சு.மனோகரன் ஓய்வுபெற்ற ஆசிரியர். அதிகரட்டி பேரூராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட கோடேரி மலைக் கிராமத்தில் இதுவரை உள்ளாட்சி கவுன்சிலர் தேர்தலே நடைபெற்றதில்லை. எந்தக் கட்சியும் அங்கு போட்டியிட்டதில்லை.

இதுகுறித்து கோடேரி கிராம மக்கள் கூறும்போது, ‘‘ஊர் மக்கள் கூடிப் பேசி, ஒருமனதாக சுயேச்சை வேட்பாளராக ஒருவரை வேட்புமனுத் தாக்கல் செய்ய வைப்பார்கள். அந்த நபரை எதிர்த்து யாருமே போட்டியிட மாட்டார்கள். இதனால், போட்டியின்றி உறுப்பினர் தேர்வாவது எங்கள் வழக்கம். இந்த முறையும் இதே முறையில்தான் மனோகரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்றனர்.

கவுன்சிலராகப் போட்டியின்றி தேர்வான சு.மனோகரன் கூறும்போது, ‘‘எனக்கு விவரம் தெரிந்து வார்டு கவுன்சிலர் தேர்வுக்கான வாக்குப்பதிவு மட்டும் கோடேரி கிராமத்தில் நடந்ததில்லை. இந்த கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. அதில், 584 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மணி என்ற சுயேச்சை வேட்பாளரைப் போட்டியின்றி தேர்வு செய்தோம். இந்தத் தேர்தலில் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். இது எங்கள் கிராமத்தில் வழக்கமான ஒன்று.

குடிநீர், சாலை, நடைபாதை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறவேண்டியிருக்கிறது. அதேபோல் அதிகரட்டி பேரூராட்சியை ஊராட்சியாக மாற்றும் வேலையையும் செய்யவேண்டியிருக்கிறது. ஊருக்குள் கட்சி பேதமின்றி அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம்’’ என்றார்.

x