புதுச்சேரி: மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடை, ரெஸ்டோ பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி என்சிசி தலைமையகம் சார்பில் ஆண்டுதோறும் கடற்படை பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணம் நடைபெறும். இந்தாண்டு 'சமுத்ர சக்தி' என்ற பெயரில் பாய்மர படகில் கடல் சாகசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கடல் சாகசப் பயண துவக்க விழா கடந்த 7-ம் தேதி தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பாஸ்கர் கலந்து கொண்டு கொடியசைத்து கடல் சாகச பயணத்தை தொடங்கி வைத்தார்.
இதில் 3 கடற்படை அதிகாரிகள், 2 இணை என்சிசி அதிகாரிகள், 11 கடற்படை பிரிவு ஊழியர்கள் மற்றும் 35 மாணவர்கள், 25 மாணவிகள் கலந்துகொண்டு 302 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தேங்காய்திட்டு துறைமுகத்தில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று, மீண்டும் அதே வழியில் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டு கடற்கரைக்கு வந்தடைந்தனர். அவர்களை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து வரவேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "இன்றைய இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களை மீட்டெடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்த நிலையில் இதுபோன்ற கடல் சாகச பயணங்கள் சமூகத்தில் தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது, சூழலுக்கு ஏற்ப தங்களை எவ்வாறு தகவமைத்து கொள்வது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும். கடல் சீற்றத்துக்கு மத்தியில் மிகுந்த துணிச்சலோடு இந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது பாராட்டுக்குரியது" என்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ''புதுச்சேரியில் நீண்ட நெடிய காலமாக மதுபான கடைகள் இருந்து கொண்டிருக்கிறன. எந்தெந்த இடங்களில் குடியிருப்புகளுக்கு இடைஞ்சலை தருகிறதோ, அந்த இடங்களில் மதுக் கடைகளை, ரெஸ்டோ பார்களை தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். போதைப் பொருள் என்பதில் மதுவை கொண்டுவந்தோம் என்று சொன்னால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. போதைப் பொருளை மதுவில் இருந்து தனியாக பிரிக்க வேண்டும். முதலில் போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிப்போம். அதேபோல், பொதுமக்கள் வாழும் பகுதியில் உள்ள மதுக்கடைகளை, ரெஸ்டோபார் களை அகற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
கடந்த மூன்று மாதங்களில் கஞ்சாவை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதை பொருள், கஞ்சா எந்தப் பகுதியில் விற்கப்படுகிறது என்பது குறித்து என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரலாம். உடனே அந்த பகுதியின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை குறைந்து வருவதை பொதுமக்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளேன். அதேசமயம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்டுள்ளேன். கடுமையான இந்த நடவடிக்கைகள் தொடரும்.
சென்டாக் கன்வீனர் நியமனம் தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளது. இதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். 2 நாட்களில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக எடுப்போம். எந்த இடத்தில் தவறுகள் நடக்கிறதோ, அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து வருகிறோம். எங்கு தவறு நடந்தாலும் என்னுடைய பார்வைக்கு கொண்டு வாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன். திமுகவும், காங்கிரசும் தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. தமிழகத்தை விட இங்கு மின் கட்டணம் உயர்வாக இருந்தால் சொல்லுங்கள், நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரியில் செமஸ்டர் தேர்வு இனி காலதாமதமின்றி நடந்து முடிவுகள் வெளியாகும்" என்றார்.