தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மே 21-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 21-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 23-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று (மே 18) தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

19-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனிமற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிகக் கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

20-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானஅல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மைலாடியில் 7 செமீ மழை பதிவாகி உள்ளது.

இன்று முதல் 21-ம் தேதி வரைகுமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழகம், கேரளா, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தயார்நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை: வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம் வெளியிட்டசெய்திக்குறிப்பு: மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில், 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி தலா 30வீரர்கள் கொண்ட, தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்துக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 300 வீரர்களை கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில், அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் படி அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

x