ஒத்த வார்டால மொத்தமும் போச்சே!


"நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து பணிபுரியும்" என அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பீ.ஏ.சித்திக் அறிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் 16வது வார்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கட்சியின் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.ஷேக் நவீத் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்நிலையில் வேட்புமனு வாபஸ் நாளன்று 16வது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கிய முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.டி.சரவணன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் 16வது வார்டில் திமுக, காங்கிரஸ், ஆகிய இரு கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இச்சூழலில் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பீ.ஏ.சித்திக் வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் நகராட்சி 16வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக் நவீத் போட்டியிடும் நிலையில் அந்த வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது வேதனையை அளித்துள்ளது. அந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் தனித்து போட்டியிடுகிறார். மேலும், நகராட்சிக்கு அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தல் பணிபுரியும்" என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் இலைமறையாக காயாக இருந்த திமுக, காங்கிரஸ் மோதல் வெட்ட வெளிக்கு வந்திருப்பது நாமக்கல் நகராட்சி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x