தென்காசி: இலஞ்சி குமாரர் கோயிலில் தீ விபத்து


தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள குமாரர் கோயில் வளாகத்தில் இன்று காலையில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டது.

இலஞ்சி குமாரர் கோயிலானது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தைப் பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். மேலும், முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மாடுகளுக்கு தீவனம் அளிப்பதற்காக கோயில் வளாகத்தில் வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. காலை சுமார் 9 மணியளவில் வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.