தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுக்கான தேர்தலையும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னணியை இங்கு பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சி அமமுக நிர்வாகியும், கடம்பூர் இளைய ஜமீனுமான மாணிக்கராஜா குடும்பத்திற்கு மிகவும் செல்வாக்குள்ள பகுதியாகும். மாணிக்கராஜாவுக்கு இங்கு இருக்கும் செல்வாக்குதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரனை இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய கோவில்பட்டித் தொகுதியில் வேட்பாளர் ஆக்கியது. அவர் கணிசமான வாக்குகளும் எடுத்தார். இந்த பேரூராட்சியில் மாணிக்கராஜாவின் சகோதரர் நாகராஜன் முன்னாள் பேரூராட்சித் தலைவராக இருந்தார்.
மொத்தம் 12 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சியில் ஒன்றாவது வார்டில் நாகராஜனும், இரண்டாவது வார்டில் அவரது மனைவி ராஜலெட்சுமியும், 11வது வார்டில் விஜயகுமார் என்பவரும் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து இந்த வார்டில் திமுக வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளர்களை முன்மொழிந்து இருந்தவர்கள் இது எங்கள் கையெழுத்தே இல்லை என பின்வாங்க மூன்று வார்டுகளிலும் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவனே, ‘கடம்பூர் பேரூராட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கிறது. அதை மீட்போம்’ என காட்டமாக பேசியிருந்தார். இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதற்கு ஒத்துழைப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. இதனிடையே மாநில தேர்தல் ஆணையம், கடம்பூர் பேரூராட்சித் தேர்தலை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையில், ‘தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் கடம்பூர் பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல்நிலை பேரூராட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.