“ஏழைகளுக்கு யாரும் உதவக் கூடாது என நினைத்தாரா மோடி?” - பிரதமருக்குப் பிரியங்கா காந்தி பதிலடி


கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தொண்டர்களையும் மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோவா தலைநகர் பனாஜிக்குச் சென்றிருக்கிறார். இன்று அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், கரோனா பொதுமுடக்கத்தின்போது மும்பையில் தொழிலாளர்களுக்குக் காங்கிரஸார் இலவச டிக்கெட் எடுத்துக் கொடுத்து கரோனாவைப் பரப்பத் தூண்டியதாக பிரதமர் மோடி பேசியதைக் குறிப்பிட்டு, “ஏழைகளுக்கு யாரும் உதவக் கூடாது என மோடி விரும்பினாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், கோவிட்-19 இரண்டாவது அலையின்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டது குறித்தும் அவர் விமர்சித்திருக்கிறார்.

நேற்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கோவிட் 19 முதல் அலையின்போது காங்கிரஸ் எல்லை மீறி நடந்துகொண்டது. நாம் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியிருந்தபோது, உலக சுகாதார நிறுவனம், ‘இருக்கும் இடத்தைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியபோது, மும்பை ரயில்வே நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச டிக்கெட் எடுத்துக் கொடுத்து ‘போய் கரோனா வைரஸைப் பரப்புங்கள்’ என அனுப்பிவைத்தது காங்கிரஸ்” என்று பேசினார். கூடவே, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசையும் விமர்சித்தார். “டெல்லியைவிட்டு வெளியேறுமாறு கூறிய டெல்லி அரசு அவர்களுக்குப் பேருந்து வசதிகளையும் செய்து தந்தது” என்று அவர் கூறினார். இந்தக் காரணங்களால்தான் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுத்திருக்கும் பிரியங்கா காந்தி, “அந்த மக்களைத்தான் மோடி கைவிட்டிருந்தார். அவர்கள் வீடு திரும்ப வழியின்றி தவித்தனர். நடந்தே ஊர் திரும்பினர். அவர்களுக்கு யாரும் உதவக் கூடாது என்று மோடி நினைத்தாரா? மோடி என்ன விரும்பினார்? இப்போது என்ன விரும்புகிறார்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “பிரதமர் மோடி மிகப் பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தினாரே?” என்றும் கேட்டிருக்கிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 2021 ஏப்ரலில், ஆசன்சோலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். எங்கெல்லாம் என்னால் பார்க்க முடிகிறதோ, அங்கெல்லாம் மக்கள் திரள் மட்டும்தான் என் கண்ணில் படுகிறது” எனப் பேசினார். அந்தக் காலகட்டத்தில் தினமும் 2 லட்சம் பேர் கரோனா தொற்றுக்குள்ளாகிவந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் நேற்றைய பேச்சுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பதிலடி கொடுத்திருக்கிறார். மோடி பேசிய காணொலியைப் பகிர்ந்திருக்கும் அவர், “பிரதமரின் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. கரோனா காலகட்டத்தில் வலியை அனுபவித்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவித்தவர்கள் குறித்து பிரதமர் உணர்வுபூர்வமாக அக்கறை கொள்வார் என நாடு நம்புகிறது. மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்வது பிரதமருக்குப் பொருத்தமானது அல்ல” என்று கூறியிருக்கிறார்.

x