கரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையில் நேற்று இரவு ட்விட்டர் துவந்த யுத்தம் நடந்திருக்கிறது.
நேற்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கோவிட் 19 முதல் அலையின்போது காங்கிரஸ் எல்லை மீறி நடந்துகொண்டது. நாம் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியிருந்தபோது, உலக சுகாதார நிறுவனம், ‘இருக்கும் இடத்தைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியபோது, மும்பை ரயில்வே நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச டிக்கெட் எடுத்துக் கொடுத்து ‘போய் கரோனா வைரஸைப் பரப்புங்கள்’ என அனுப்பிவைத்தது காங்கிரஸ்” என்று பேசினார். கூடவே, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசையும் விமர்சித்தார். “டெல்லியைவிட்டு வெளியேறுமாறு கூறிய டெல்லி அரசு அவர்களுக்குப் பேருந்து வசதிகளையும் செய்து தந்தது” என்று அவர் கூறினார். இந்தக் காரணங்களால்தான் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, “கரோனா ஏற்படுத்திய வலியால் மொத்த மனிதகுலமும் முனகிக்கொண்டிருந்த நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை டெல்லியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினீர்கள். உங்கள் அரசு மனிதாபிமானமற்ற வகையிலும் ஜனநாயாக விரோதமாகவும் நடந்துகொண்டு நள்ளிரவில் உத்தர பிரதேச எல்லையில், குழந்தைகளும் பெண்களும்கூட ஆதரவற்ற நிலையில் தவிக்குமாறு செய்தது. உங்களை மனிதகுலத்தின் துரோகி என்று அழைப்பதா அல்லது பொய்யர் என்று அழைப்பதா? தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மின்சாரம், தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக உத்தர பிரதேச எல்லைக்கு பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உத்தர பிரதேச அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களைப் பத்திரமாக அழைத்துவந்தது” என்று ட்வீட் செய்திருந்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இதற்கு எதிர்வினையாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால், “உத்தர பிரதேச மக்களின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த நேரத்தில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்களை வழங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்களைப் போன்ற இதயமற்ற குரூரமான ஆட்சியாளரை நான் கண்டதே இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
பிரதமர் மோடி சுட்டிக்காட்டிய உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.