13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி!


முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில்

கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை பணியில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, அப்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், “பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் அந்த முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அந்த பரிசீலனை செய்யப்பட, வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

x