குமரியில் கவனம் குவிக்கும் மாற்றுத்திறனாளி வேட்பாளர்


கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றுத்திறனாளி இளைஞர் போட்டியிடுகிறார். தன் உடல் குறைபாடுகளைப் புறந்தள்ளி, மக்கள் பணி செய்ய முனைப்புகாட்டும் அந்த இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சி தன் முதல் தேர்தலை சந்திக்கிறது. இங்கு 11வது வார்டில் மாற்றித்திறனாளியான முகமது புறோஸ்கானுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்புக் கொடுத்துள்ளது. பள்ளிக்காலத்திலேயே இந்திய மாணவர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த முகமது புறோஸ்கான், எம்.காம், எம்.பி.ஏ பட்டதாரி.

முகமது புறோஸ்கான்

தற்போது 34 வயதாகும் இவர், அந்தப் பகுதி மக்களுக்காக இடதுசாரி இயக்கத்தினரோடு கைகோர்த்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தவர். இப்போது தேர்தல் பணிகளிலும் சுறு, சுறுப்புக்காட்டும் முகமது புறோஸ்கானுக்கு வாழ்த்துச் சொல்லி காமதேனு இணையதளத்திற்காக சந்தித்தோம்.

‘எனக்கு இரண்டு வயசு இருக்கும்போது ஒருநாள் கடுமையான காய்ச்சல் வந்தது. மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துப் போனபோதுதான் அது போலியோ எனத் தெரியவந்தது. இருகால்களும் 80 சதவிகிதம் செயல் இழந்துவிட்டது. அப்போதில் இருந்தே ஊன்றுகோலும் என் தோழனாகிவிட்டது. ஆனாலும் கல்வியும், சமூகப்பணியும் மிக முக்கியம் என்பதை ஆழமாக உணர்ந்தேன். அதனால் தான் எம்.காம், எம்.பி.ஏ பட்டம் பயின்றேன்.

எம்.காம் படித்திருந்தாலும் வங்கிப்பணிக்குத் தயாராவதில் மனம் நாடவில்லை. மக்கள் பணியின் மீதே எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. இப்போதுதான் முதன் முதலாகத் தேர்தலை சந்திக்கிறேன். மார்க்சிஸ்ட் கட்சியின் முஞ்சிறை வட்டாரக் குழு உறுப்பினராகவும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளேன்.

போராட்டக் களத்தில்

சி.பி.எம் கட்சியோடு கைகோர்த்து இந்தப் பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு நீண்டகாலமாக குரல் கொடுத்தும், போராடியும் வருகிறேன். இதனால் மக்கள் எனக்கு நிச்சயம் வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் வாக்கு அரசியலை அந்நியமாக நினைத்து ஒதுங்கக் கூடாது. அரசும், அவர்களை தேர்தல் மயப்படுத்த வேண்டும். பெண்களுக்கு, பட்டியல் இனத்தோருக்கு இட ஒதுக்கீடு இருப்பது போல் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதேபோல் வேட்புமனுத்தாக்கலுக்கு பட்டியல் இனத்தோருக்கு கட்டண சலுகை இருப்பதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை அறிவிக்கவேண்டும்.

இப்போது நானே நகராட்சித் தேர்தலுக்கு 2000 ரூபாய் கட்டியிருக்கிறேன். இதில் சலுகை காட்டினால் இன்னும் மாற்றுத்திறனாளிகள் அதிகளவுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடும். எங்கள் ஊர், ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த பகுதி. இங்கு ஊன்றுகோலோடு செல்வதும், சுற்றுவதும் சிரமம் தான். ஆனால் அதை நான் சிரமமாகவே பார்க்காததற்குக் காரணம் எங்கள் பகுதிமக்கள் காட்டும் அன்புதான். வெகுசிலரே, ‘உன்னால் இது முடியுமா...ஏன் கஷ்டப்படுகிறாய்?’ எனக் கேட்கிறார்கள். அவர்களிடமும்கூட மற்றவர்கள், ‘நமக்காக இந்த பையன்..நம்மை நம்பித்தானே நிற்கிறான். அதுவும், திடீர் என வரவில்லை. நம் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராட்டங்களிலும் நின்றவன் அல்லவா?’ எனக் கேட்கின்றனர். இது எனர்ஜி டானிக்காக உள்ளது.

மக்களிடம் நெருங்கிப் பழகி, வார்டுக்குள் சுற்றியதில் பலப் பிரச்சினைகளையும் உள்வாங்கியிருக்கிறேன். இங்கு மக்களுக்கு சுத்திகரிப்பட்ட நல்ல குடிநீர் வசதி தேவை. சாலைகள் மிகவும் தரமின்றி இருக்கிறது. நல்ல சாலைவசதி தேவை. ரேசன் கடைகளில் எடை குறைவாக இருப்பதாகவும் புகார் சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு உடலினை உறுதிசெய்ய நல்ல ஒரு விளையாட்டு மைதானம் தேவை. இதையெல்லாம் வென்றால் செய்துகொடுப்பேன்’’ என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் முகமது புறோஸ்கான் மட்டுமே மாற்றுத்திறனாளியாவார். வேறு எந்த கட்சியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டியிட சீட் வழங்கவோ, மாற்றுத்திறனாளிகள் சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x