தாமரையை மலர வைக்க தடதடக்கும் பாஜக!


தாமரை மாலை சூடிக்கொண்ட பாஜக வேட்பாளர்கள்

மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளில் எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்று அதிரடி பிரச்சாரம், கூட்டுப் பிரார்த்தனை என்று பாஜக வேட்பாளர்கள் எல்லா வகையிலும் தூள் கிளப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி முடிந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

விநாயகரிடம் வழிபடும் பாஜக வேட்பாளர்கள்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவரும் அதிரடியாக பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றனர். கோயில்களில் வழிபாடு, முதியவர்களின் காலில் விழுதல், தாமரை மலரை தந்து வாக்கு கேட்பது என விதவிதமான முறைகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சி 16 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்திரசேகரன், 6 வது வார்டில் போட்டியிடும் பாரதிகண்ணன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சியில் தாங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தாமரை மலர வேண்டும் என்று சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். விநாயகருக்கு தாமரை மலர்களாலான மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பாஜக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு தாமரையிலான மாலையை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.

தாமரை மலர் கொடுத்து வாக்கு கேட்கும் பாஜக வேட்பாளர்

16 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகரன் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களுக்கு தாமரை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் தாமரை மலரை கொடுத்து வாக்கு சேகரித்தார். இதேபோல் 6 வது வார்டில் போட்டியிடும் பாரதி கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னேயே, தாங்கள் வேட்பாளர்களாக உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாஜகவினர் அதிரடியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பது களத்தில் அவர்களை விரைவாய் கொண்டு சேர்க்க உதவுகிறது.

x