அதிமுக வேட்பாளர் கடத்தலா?


அதிமுகவினர் மறியல் போராட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. இதில் 9வது வார்டில் திமுக சார்பில் முன்னனள் பேரூராட்சித் தலைவி கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் அவர்தான் பேரூராட்சித் தலைவர் என்று கூறப்படுகிறது.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் இந்திராணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த வார்டில் திமுக, அதிமுக என்று 2 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று திடீரென அதிமுக வேட்பாளர் இந்திராணி மாயமானார். இன்று வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என்பதால், அவரை எங்கே என்று அதிமுகவினர் தேடினார்கள். அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அவரை திமுகவினர் கடத்திவிட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் கடத்திய எங்கள் வேட்பாளரை மீட்டுத்தர வேண்டும் என்றும், ஜனநாயகப் படுகொலை செய்யும் திமுக ஒழிக என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதற்கிடையே, இந்திராணி சார்பில் அவரது அதிகாரம் பெற்ற முகவர் ஒருவர், அவரது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதனால், திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவிருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

x