பட்டியலின வாக்காளர்களை குறி வைக்கும் காங்கிரஸ்!


ராகுல் காந்தியுடன் நவ்ஜோத்சிங் சித்து- சரண்ஜித்சிங் சன்னி

நாடு முழுவதிலும் காங்கிரஸுக்கு பட்டியலின சமூகத்தினரின் வாக்குகள் சரிந்துவிட்டன. இதன் எண்ணிக்கை, கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு சுமார் 26 சதவிகிதமானதாக ஒரு புள்ளிவிவரம் கூறியது. இதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு 41 சதவிகிதம் பட்டியலின சமூகத்தினரின் வாக்குகள் கிடைத்தன. இதனால்தான் பட்டியலின இன மக்களின் வாக்குகளை மீட்டெடுக்கும் பணியில் காங்கிரஸ் இறங்கிவிட்டது.

இதற்கான துவக்கத்தை காங்கிரஸ் பஞ்சாபில் ஆரம்பித்துள்ளது. இங்குள்ள பட்டியலின வாக்காளர்களுடன், பஞ்சாபிற்கு வெளியே நாடு முழுவதிலும் காங்கிரஸ், பட்டியலின சமூகத்தினரை குறி வைத்துள்ளது. இதை, அக்கட்சி பஞ்சாபில் சரண்ஜித்சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து சூசகமாகக் காட்டியுள்ளது.

இதன்மூலம், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்து காங்கிரஸ் தலைமையால் இழுக்கப்பட்டு வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டிலேயே முதன்முதலாக இப்பதவிக்கு ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை, காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது. இதன்மூலம், அக்கட்சி நாடு முழுவதிலும் பட்டியலின வாக்காளர்களை குறி வைத்து அரசியல் செய்யும் என எதிர்நோக்கப்படுகிறது.

நவ்ஜோத்சிங் சித்து- சரண்ஜித்சிங் சன்னி

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாபின் ராஜ குடும்பங்களை சேர்ந்த ஒருவராக கேப்டன் அம்ரீந்தர்சிங் முதல்வரானார். இவருக்கு, பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்து மாநிலத் தலைவராக்கப்பட்ட நவ்ஜோத்சிங் சித்து, கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினார். இதனால், கேப்டன் அம்ரீந்தரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய காங்கிரஸ், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரான சரண்ஜித்சிங் சன்னியை முதல்வராக்கியது. இவர், 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஆவாரா? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

ஏனெனில், இவருக்கும் எதிர்ப்பு தெரிவித்த நவ்ஜோத்சிங் சித்து, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்சியை வலியுறுத்தி வந்தார். பஞ்சாபில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமுள்ள சீக்கியர்கள், தம் சமூகத்தை தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்றதில்லை. இச்சூழலில், பொறுத்தமானவராக இருந்தும் உட்கட்சி பூசல் காரணமாக சித்துவை காங்கிரஸ் அமர்த்தவில்லை. இவருக்கு பதில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி- நவ்ஜோத்சிங் சித்து- சரண்ஜித்சிங் சன்னி

இவரை காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவரான ராகுல் காந்தி அறிவிக்கும் போது ’சன்னி ஒரு ஏழை’ என்றாரே தவிர சமூகத்தை குறிப்பிடவில்லை. எனினும், சன்னியை முதல்வர் வேட்பாளராக்கி காங்கிரஸ், அம்மாநிலத்தில் சுமார் 32 சதவிகிதமுள்ள பட்டியலின சமூகத்தை குறி வைத்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்பின் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுரேந்தர் ஜோத்கா, பஞ்சாபில் கிராமப்புறங்களில் சுமார் 50 சதவிகிதம் பட்டியலின வாக்குகள் காங்கிரஸுக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபின் 34 தனித்தொகுதிகளில் காங்கிரஸ் 23 இல் வென்றது. எனினும், இதில் அக்கட்சிக்கு சுமார் பத்து சதவிகிதம் பட்டியலின வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருந்தது. இதற்கு முன்பான 2012 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு பட்டியலின வாக்குகள் 51 சதவிகிதம் கிடைத்திருந்தன. எனவே, தனது சரிவை சரிகட்ட, பட்டியலினத்தை சேர்ந்த சன்னியை முதன்முறையாக முதல்வர் வேட்பாளராக்கிவிட்டது காங்கிரஸ். இதன்மூலம், பஞ்சாபிற்கு வெளியிலும் பட்டியலின வாக்காளர்களை தனது குறியாக்கிவிட்டது காங்கிரஸ். பஞ்சாபின் தாக்கம், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டிலும் கிடைத்தால் தான், காங்கிரஸின் கணக்கு சரியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

x