ராகுல் முடிவின் ரகசியம் என்ன?


சரண்ஜீத் - ராகுல் - சித்து

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் பஞ்சாப்பில், அரசியல் களத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓர் அறிவிப்பை, காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக இன்று(பிப்.6) வெளியிட்டுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின் காங்கிரஸ் கட்சிக்கான முதல்வர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் வேட்பாளர் முகமின்றியே சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பஞ்சாப் காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கே உரித்தான பூசல்கள் அதிகம் நிலவியதாலும்; கட்சியை முன்னிறுத்தியும், ஆட்சிக் காலத்தின் செயல்பாடுகளை பிரச்சாரம் செய்தும் வாக்காளர்களை கவருவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் தேர்தலில் மும்முரமாக களமாடும் வேகத்தையும், முதல்வர் வேட்பாளரை அறிவித்த பின்பே அவர்கள் பிரச்சாரத்தில் இறங்கியதையும் அடுத்து, காங்கிரஸும் முதல்வர் வேட்பாளரை அறிவித்தாக வேண்டிய நெருக்கடி எழுந்தது. அதிலும் அரியணையில் முதல்வராக ஒருவரை கொண்டிருக்கும் கட்சி, முதல்வர் முகமின்றி பிரச்சாரத்துக்கு செல்வது நம்பகத்தன்மை குறைக்கும் என்பதாக கட்சியினர் மத்தியிலே விவாதிக்கப்பட்டது. வெளியிலிருந்து விழுந்த நெருக்கடிகளைவிட கட்சியின் உள்ளிருந்து எழுந்த, வேறு சில குடைச்சல்களை சமாளிக்கவும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியதானது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு தாவிய நவ்ஜோத் சிங் சித்துவின் இறுதி இலக்கு, முதல்வர் இருக்கையாக இருந்தது. காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சித்து, தனது அரசியல் சித்து விளையாட்டுகளால் அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கு தீராத தலைவலியானார். இதன் விளைவாக அமரீந்தர் சிங், காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டிருக்கிறார். தற்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சித்துவும், சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராகும் கனவில் இருந்தார். ஆனால் கட்சித் தலைமையின் முடிவு வேறாக இருந்தது.

அமரீந்தர் சிங்கால் காலியான முதல்வர் நாற்காலியில், பொம்மை முதல்வராக அமர்த்தப்பட்டவர் என்று கணிக்கப்பட்ட சரண்ஜீத் சிங், வரும் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதி கிடைத்தபோதே, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியானது. அடுத்து, அமலாக்கத்துறை சார்பிலான விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் சரண்ஜீத் சிங்கின் உறவினரை வளைத்தபோது, காங்கிரஸின் முதல்வர் வேட்பாளருக்கு எதிர்க்கட்சியான பாஜக நெருக்கடி என்று செய்திகள் வெளியாயின. பொறுமையிழந்த சித்து, ‘பலவீன முதல்வரையே மேலிடங்கள் விரும்புகின்றன’ என தனது ஆட்சேபத்தை ட்விட்டரில் பதிவு செய்தார். இன்று காலையிலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே, முடிவை அறிந்தவராக தனது கசப்பை ட்விட்டர் பதிவில் வெளிக்காட்டியிருந்தார்.

இப்படி சொந்தக் கட்சி, எதிர்க்கட்சி என எல்லோராலும் அறியப்பட்டதை, ஒருவழியாக இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ராகுல் காந்தி. சரண்ஜீத் சிங்கின் தலித் அடையாளம், எளிமை, தலைமைக்கு கட்டுப்படுவது, பெரிதாய் கோஷ்டி சேர்க்காதது என பலவகையிலும் அவர் கட்சித்தலைமையை திருப்தி செய்துள்ளார். அமைதியின் திருவுருவாய் இருந்த சரண்ஜீத், பிரதமர் மோடியின் பஞ்சாப் பிரவேசத்தை முன்னிட்டு, பாஜவினரின் அரசியல் தாக்குதல்களை சமாளித்து களமாடியவிதத்திலும் சொந்தக்கட்சியினரிடம் செல்வாக்கு பெற்றுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் தயார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் சேருமா; மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி பெரிதாய் மிச்சமிருக்கிறது. வாய்ப்பிழந்த சித்து இனி என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தும் அந்த கேள்வியின் வீரியம் பொதிந்திருக்கிறது.

x