புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் போனதால் அவரது புகைப்படத்தை கொண்டு தனி ஒருவருராக இரண்டு ஆண்டுகளாக தேடி அலைந்துகொண்டிருக்கிறார் தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது தாய்.
துாத்துக்குடி புதிய பஸ் நிலையம், அண்ணா நகரைச் சேர்ந்த சலவை தொழிலாளி குருசாமியின் மனைவி பேச்சியம்மாள் (வயது 70). இவருக்கு 2 மகள், ஒரு மகன். இரு மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடைசி மகன் ரவி (38) வேலை தேடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சென்றுள்ளார். அடிக்கடி போன் செய்து தாய், தந்தையிடம் பேசி வந்துள்ளார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் செல்போனில் பேசிய ரவி, விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி உள்ளார்.
பேச்சியம்மாள் கணவர் குருசாமியுடன், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தபோது, ரவி புறப்பட்டு சென்றுவிட்டதாக ஊழியர்கள் கூறினர். பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், ஊருக்கு சென்றுவிட்டனர். அதன்பிறகு, பேச்சியம்மாள் ஒவ்வொரு மாதமும் தான் சம்பாதிக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி, புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, நகர பகுதி பிளாட்பாரங்கள், உருளையன்பேட்டை போலீஸ் நிலையம் என பல இடங்களில் தேடி அலைந்தும் மகன் ரவியை கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்வர் ரங்கசாமியை சந்தித்தால் மகனை கண்டுபிடிக்க உதவி செய்வார் என சிலர் கூறியுள்ளனர். அதன்பேரில், மூதாட்டி பேச்சியம்மாள் சட்டசபை எதிரில் காத்திருந்தார்.
முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தபோது, மூதாட்டி பேச்சியம்மாள் முதல்வரை சந்தித்து தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர், மூதாட்டியின் மகனை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தனது மகனை தேடுவதற்காக மட்டும் தனது கழுத்தில், காதில் இருந்த நகைகளை விற்று சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார் பேச்சியம்மாள்.