மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக 77 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 23 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் முடிவெடுத்தது. அதன்படி காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் 8, விடுதலை சிறுத்தைகள் 2, மதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 1 என்று வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 'அந்த ஒரு வார்டையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய இயக்கங்களான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு வார்டு கூட ஒதுக்கப்படவில்லை. இதனால், முஸ்லீம் லீக் சார்பில் 44 மற்றும் 61ல் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். திமுக கூட்டணியில் இருந்தும்கூட அங்கே போட்டியிடும் திமுக மற்றும் மதிமுக வேட்பாளர்களை எதிர்த்து இ.யூ.மு.லீ. மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹீமீது மனைவி சுமைதா பீவியும், 61வது வார்டில் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் உசேன் மனைவி சாலியா வாஹித்தும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் கட்சி சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சுமார் 20 வார்டுகளில் பலமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 2 வார்டுகள் மட்டும் ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியினரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். விளைவாக, 59வது வார்டில் மத்திய தொகுதி செயலாளர் ரவிக்குமாரின் மனைவி சுதா சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறார். அதேபோல 77 வார்டில் வட்ட செயலாளர் சக்திவேல் மனைவி கலைவாணி சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறார். 71வது வார்டில் விசிக ஆதரவுடன் சிதம்பரம் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.மாலினிடம் கேட்டபோது, "மதுரை மாநகராட்சியில் 26 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலுவாக இருக்கிறது. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே இக்கட்சியினர் தான் என்கிற அளவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால், தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் விசிகவுடன் பேசவே திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் விரும்பவில்லை. சாதிப்புத்தியுடன் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். புரட்சியாளர்கள் மற்றும் தூய தமிழ்ப்பெயரை வைத்திருக்கும் எங்கள் கட்சி நிர்வாகிகளை மிக மோசமாக நக்கலடித்துச் சிரித்தார்கள். இதை எல்லாம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கற்றுக்கொண்டார்கள் போல.
மதுரையில் 26 வார்டுகளில் செல்வாக்குள்ள எங்களுக்கு வெறும் 2 சீட். ஆனால், தொண்டர்களே இல்லாத காங்கிரசுக்கு 9, கம்யூனிஸ்ட்டுக்கு 8 என்று ஒதுக்குவது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. எங்களுக்காவது 2 வார்டு கொடுத்தார்கள். இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு புறக்கணித்துவிட்டார்கள். இன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருப்பதற்குக் காரணமே சிறுபான்மையினரும், ஆதிதிராவிடர்களும் போட்ட ஓட்டுத்தான். இன்னொரு கொடுமை என்னவென்றால், சட்டப்படி பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டிய ஒரு வார்டைக் கூட ஒதுக்கவில்லை. இந்தப் புறக்கணிப்பு மதுரையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் சமூக நீதி கூட்டமைப்பை அமைக்கிற அளவுக்கு புரிதலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். ஆனால், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளோ சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போல. இவர்களது மட்டமான செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள பட்டியலினத்தவர்களும், சிறுபான்மையினரும் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடும். அப்படி நடந்தால், அது இந்தத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்திவிடும். இதே போக்கை திமுக நிர்வாகிகள் தொடர்ந்து கடைபிடித்தால், திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலுக்குள் விரிசல் கண்டுவிடும்” என்றார்.