மகாராஷ்டிராவில் ஒயின் விற்பனை தொடர்பான மாநில அரசின் கொள்கையைக் கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட ஒயின் விற்பனையை, சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் தகுதிபடைத்த மளிகைக் கடைகளுக்கு விரிவுபடுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மாநில அரசு தனது ஒயின் விற்பனைக் கொள்கையை மறுபரிசீலனை செய்யாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிப்.3 அன்று, தான் எழுதிய கடிதத்துக்கு உரிய பதில் வரவில்லை என்றும் குறைபட்டுள்ளார். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமன்றி, அதற்கு இணையான போராட்டங்கள் மாநிலம் முழுக்க முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர், ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தின் அங்கமாக, லோக்பால் மசோதா நிறைவேற்றலை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டங்களின் வழியாக, அப்போதைய ஆளும்கட்சியான காங்கிரசுக்கு எதிரான சரிவு தொடங்கியது. பாஜக ஆட்சியில் பெருத்த மவுனம் காத்துவந்த அன்னா ஹசாரே, தற்போது, மகாராஷ்டிராவை ஆளும் சிவாசேனாவுக்கு எதிராகப் பாய ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விற்பனையில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கடந்த மாதம் அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருந்தார்.
அடுத்த கட்டமாக தற்போது மகாராஷ்டிர அரசின் ஒயின் விற்பனை கொள்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிப்.3-ம் தேதியிட்ட முதல் கடிதத்துக்கு பதில் வராததால், நினைவூட்டல் கடிதத்தை அன்னா ஹசாரே தற்போது அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.