பாஜக தேர்தல் அறிக்கை, பேரணி ஒத்திவைப்பு


இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவு காரணமாக, இன்று(பிப்.6) வெளியிடப்படுவதாக இருந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் விர்ச்சுவல் பேரணி ஆகியவற்றை ஒத்திவைப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

கோவிட் மற்றும் நிமோனியா பாதிப்பால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், ஒருமாத கால மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சினிமாத் துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இன்று நடைபெறுவதாக இருந்த, தங்கள் கட்சியின் முக்கிய நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல், பிப்.10-ல் தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி மார்ச் 10 அன்று நடைபெற உள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட அளவில் பெரிய மாநிலமான உபியில், தற்போது ஆட்சி நடத்தும் பாஜகவுடன், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. கரோனா பரவலின் மத்தியிலும் அங்கே தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் அங்கமாக லக்னோவில் இன்று, கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக, உபி பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவாவில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுவதாக விர்ச்சுவல் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நாள் துக்கம் அனுசரிகப்படுவதுடன், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பை சிவாஜி பார்க்கில் இன்று மாலை, லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

x