ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு: சிவில் சப்ளை சிஐடி ஐஜி நடவடிக்கை


சென்னை: தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு மூலம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும், மானிய விலையில் பருப்பு, எண்ணெயும் வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக, அரசு கொடுக்கும் அரிசியை சிலர் பட்டை தீட்டி, பக்குவப்படுத்தி, பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடத்தல் பின்னணியில் பல்வேறு குழுக்களாக சிறியது முதல் பெரியது வரையான கும்பல் மாபியா போன்று செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கும்பலுடன் சிவில் சப்ளை சிஐடி (குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை) போலீஸார் சிலர் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த அப்பிரிவு ஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர்களை கணக்கெடுத்து, களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லையில் உள்ள 58 வாகன சோதனைச் (செக்போஸ்ட்) சாவடிகளில் உள்ள போலீஸாருடன் ஒருங்கிணைந்து சிவில் சப்ளை சிஐடி போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த பணியில் ஏதேனும் தொய்வு உள்ளதா என்பதை அப்பிரிவு ஐஜி மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். போலீஸாரின் தொடர் நடவடிக்கையால் ரேஷன் அரிசி உட்பட பல்வேறு கடத்தல் விவகாரம் தொடர்பாக இந்தாண்டு ஜனவரி 1 முதல் கடந்த மாதம் 12-ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில் 4,946 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலக்கட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மட்டும் 4,360 வழக்குகள் பதிவாகின. 13,751 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.77 லட்சத்து 69 ஆயிரம். கடத்தல் தொடர்பாக 747 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 41 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புகார் அளிக்கலாம்: இதுகுறித்து சிவில் சப்ளை சிஐடி ஐஜி ஜோஷி நிர்மல் குமார் கூறும்போது, ‘ரேஷன் அரிசிகடத்துபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறோம். சட்ட விரோதமாக ரேஷன்அரிசி கடத்துபவர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.

x