மாணவர்களை நாட்டுக்கோழி வளர்க்கச் சொல்வதா?


மத்திய பாஜக அரசு வகுத்த தேசியக் கல்விக் கொள்கையின் திட்டங்களில் கடுமையான கண்டனத்துக்கு ஆளானது மட்பாண்டம் செய்தல், தச்சு வேலை போன்ற கைத்தொழிலை பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் அம்சமாகும். இது குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் புகுத்தும் முயற்சி என்று 2019-லேயே, அன்று தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திமுக வன்மையாகக் கண்டித்தது.

தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் திமுக தலைவர்கள் சூளுரைத்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக பள்ளிக் கல்வி தொடர்பான உயரிய அதிகாரத்தை வகிக்கும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தேசிய கல்விக் கொள்கையில் நல்லதை எடுத்துக்கொள்வோம் என்றார். இது கூட்டணிக் கட்சிகளையும் கல்வியாளர்களையும் அதிருப்தி அடையச் செய்தது.

இதில் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தின் மாதிரியைக் கொண்டு, தற்போது ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. இதில் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியைச் சமன் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவும், ஆசிரியர்களின் பணிக்குக் குந்தகம் விளைக்கும் தேசிய கல்விக் கொள்கையின் ஓர் ஆபத்தான அம்சம் என்று இன்றுவரை கண்டனம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டுக்கோழி வளர்க்கச் சொல்லும் சுற்றறிக்கை

இந்நிலையில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து அண்மையில் சுற்றறிக்கை ஒன்று அம்மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மாண்புமிகு பாரதப் பிரதமர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மனுவின்படி...பள்ளி மாணவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற சுயதொழிலைத் தொடங்கி வளமான எதிர்காலத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுவருவதையே இது காட்டுகிறது என்ற பதற்றம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தீக்குச்சி, பட்டாசு செய்யச் சொல்கிறார்களா?

இது தொடர்பாகக் கல்வியாளர்கள் சிலருடன் உரையாடினோம். தேசியக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் ப.சிவக்குமார் நம்மிடம் தெரிவித்தார். அனைவரும் கல்வி பெற்று உயரத் தேவையில்லை என்பதையே தேசியக் கல்விக் கொள்கை முன்மொழிகிறது என்கிற வாதத்தையும் அவர் முன்வத்தார்.

பேரா.சிவக்குமார்

“சமூகம் பற்றிய புரிதல், ஆராய்ச்சி மனோபாவத்துடன் அறிவியல், இலக்கணம், இலக்கியத்தைக் கற்கத் தூண்டுதல் ஆகியவற்றை மாணவர்களுக்கு ஊட்டக்கூடியதைத்தான் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து, படிப்பு ஏறாது என்று முடிவுகட்டி 6-8 வகுப்புகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கைத்தொழில் சொல்லித் தரச் சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை. அதேபோல உயர்கல்வி மேற்கொள்பவர்களும் இடையில் விலகிக்கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல் டிப்ளோமா, ஹானர்ஸ் டிகிரி வழங்கப்படும் என்கிறது. அப்படியானால் இடைநிற்றலை ஊக்குவிக்கிறதா மத்திய அரசு? அப்படி இடைநின்று செல்பவர்களுக்கு அரசு எந்த வேலைவாய்ப்பும் தராது. கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல் போன்ற சுயதொழில் செய்து பிழைப்பு நடத்திக்கொள்ளச் சொல்கிறது. அதிலும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த தொழில்களைக் கற்கச் சொல்கிறது. அப்படியானால் சிவகாசியில் உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தீக்குச்சி, பட்டாசு செய்வதெப்படி என்று சொல்லிக் கொடுத்து, ஒருவேளை படிப்பை 8-ம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல் போனால் குழந்தைத் தொழிலாளராகச் சொல்கிறார்களா?

தேசியத் திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் கல்விக் கொள்கையை ஒப்பிட்டு அலசினால், வெறும் திறன் வளர்ப்பு திட்டமாகத்தான் மத்திய அரசுக் கல்வியை அணுகுவது புரியும். அதிலும் சாமானிய மக்களுக்கு ஆழமான புரிதலோ ஆராய்ச்சிப் பண்போ அவசியமில்லை என்றே மத்திய அரசு கருதுகிறது. மறுபுறம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைக் கற்கச் சொல்கிறார்கள். திறனும், தொழில்நுட்பமும் மட்டும் கல்வியாகாது. ஆராய்ச்சி அறிவைக் குழந்தைகளுக்கு ஊட்டத் தவறினால் மேக் இன் இந்தியா எப்படி சாத்தியம்? பத்தாண்டுகள் கழித்து இந்தியக் குழந்தைகளின் நிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது” என்று ஆதங்கத்துடன் பேசினார், பேராசிரியர் சிவக்குமார்.

இப்படிப்பட்ட சுயதொழில் பயிற்சிகள் எல்லாம் ஏழை, கீழ்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் நிர்ப்பந்திக்கப்படும். ஒருபோதும் சிபிஎஸ்இ மற்றும் வசதிபடைத்தவர்களுக்காக நடத்தப்படும் தனியார் பள்ளி மாணவர்களை அண்டாது என்பதும் கல்வியாளர்களின் வாதமாக உள்ளது.

விழியன்

திமுக அரசு உறுதியாகவே உள்ளது!

கரோனா காலம் தொடங்கியதுமே, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே தேசியக் கல்விக் கொள்கை சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவது அப்போதே தொடங்கிவிட்டது. இருப்பினும் தேசியக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில், திமுக அரசு உறுதியாக இருப்பதாகக் கல்வியாளர் விழியன் சுட்டிக்காட்டுகிறார்.

“கடந்த இரண்டாண்டுகளாக நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாததால், இன்றைய தேதியில் 3-ம் வகுப்பில் சேரும் குழந்தைக்கும் 5-ம் வகுப்பில் சேரும் குழந்தைக்கும் இடையில் எழுத்தறிவில் வித்தியாசமே இல்லை. ஆகவே எழுத, வாசிக்க, கணக்குப் போட கற்பிக்கும் ’எண்ணும் எழுத்தும்’ புத்தகத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வடிவமைக்கவிருக்கிறது. அதேபோன்று பள்ளியைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குள் வெற்றிகரமாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிலும் கர்ப்பிணிகளாக நிற்கும் பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கூடத்துக்குள் அழைத்துவரும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. நூலகங்களைப் புதுப்பிக்கும் திட்டமும் செறிவாக நடைபெற்றுவருகிறது. ஆனாலும் மாநிலப் பள்ளிக் கல்விக்கென மத்திய அரசு நிதியளிக்கும் ‘சமக்ர சிக்‌ஷா’ போன்ற திட்டங்களின் வழியாக பாஜக அரசு தனது அதிகாரத்தை மாநிலங்களின் மீது செலுத்த முயல்கிறது. இப்படித்தான் கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தின் சில அரசுப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதனால் நமக்குப் பலன் இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. உதாரணத்துக்குத் தேசியக் கல்விக் கொள்கையில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது. ஆனால், ஊட்டச்சத்து 2.0 என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபோது அதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லை. பிறகு எப்படி நலத்திட்டத்தை அமல்படுத்துவார்கள்?” என்றார் விழியன்.

தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள சாதகமான அம்சங்களை ஏற்பதில் தமிழகக் கல்வியாளர்களுக்குத் தயக்கமில்லை. ஆனால், நாட்டுக்கோழி அல்லாது நாட்டை வளர்க்க திட்டம் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளதா என்பதுதான் அவர்களது கேள்வி!

x