சாதி அரசியலை நோக்கி அதிமுக செல்கிறது: சசிகலா விமர்சனம்


சசிகலா

சென்னை: சாதி அரசியலை நோக்கி அதிமுக செல்வதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றதுடன் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும் என அப்போது சசிகலா அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று சசிகலாவின் ஆதரவாளர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:

திமுகவில் வாரிசு அரசியல் தலை விரித்தாடுகிறது. நமது இயக்கம் முதல்முறையாக சாதி அரசியலை நோக்கி செல்வதாக கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதி அரசியலுக்குள் செல்கிறார்கள். சாதியை வளர்க்க வேண்டும் என்றால் ஒரு தனி அமைப்பை தொடங்கி நடத்தலாம். எம்ஜிஆரால் தொடங்கி, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்தில் அதை செய்யக்கூடாது.

நான் பழனிச்சாமியை முதல்வராக்கும் போது சாதியை பார்த்து செய்யவில்லை. மேற்கு மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். அதனால் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாகவே முதல்வர் பதவி வழங்கினேன். ஆனால் இன்று அதிமுக 3-வது, 4-வது இடங்களுக்கு சென்று விட்டது. டெபாசிட்இழந்துள்ளது.

தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய என்ட்ரி தொடங்கியிருக்கிறது. நிச்சயமாக 2026-ல் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அமைப்போம்.

விரைவில் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன். திமுகவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க நாம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும். இன்று அதிமுக நான்காக பிரிந்து இருக்கலாம். எல்லோரும் ஒன்றாக சேருவார்கள். இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய தவறு. இதற்கு திமுகதான் காரணம்.

திமுக ஆட்சியில் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கவில்லை. இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இதைக் கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்.

கோடநாடு வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தல் வரும்போது மட்டும் கோடநாடு குறித்து முதல்வர் பேசுகிறார். இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x