அரசுமுறைப் பயணமாக ஹைதராபாத் வந்திறங்கிய பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் வரவேற்பதை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தவிர்த்தார்.
கடந்த மாதம் பஞ்சாபுக்குச் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் செல்லாது, மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் தவிர்த்தார். தொடர்ந்து பிரதமரின் பயணத் தடத்தில் எழுந்த பாதுகாப்பு குறைபாடு அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த வரிசையில் தற்போது தெலங்கானா முதல்வரும் சேர்ந்திருக்கிறார்.
மாலை நடைபெற உள்ள ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று(பிப்.5) ஹைதராபாத் வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில கால்நடைத் துறை அமைச்சர் தலாசானி சீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். மாநில முதல்வரான கே.சந்திரசேகர் ராவ், பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்வதை தவிர்த்து விட்டார்.
நாட்டின் பிரதமர் அரசுமுறைப் பயணமாக வருகை தருகையில், அவரை வரவேற்க மாநில முதல்வர் வருகை தராதது குறித்து, தெலங்கான பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘’முதல்வரின் செயல் முட்டாள்தனமானது, வெட்கக்கேடானது’’ என்றெல்லாம் தாக்கி வருகின்றனர். அண்மையில் பிரதமர் மோடியை அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கான உடைகளைக் குறிப்பிட்டு, முதல்வர் சந்திரசேகர் ராவ் பகிரங்கமாக விமர்சித்து இருந்தார்.
பிரதமரை வரவேற்க முதல்வர் விமான நிலையம் செல்லாதது குறித்து வெளியான ஆட்சேபங்களை அடுத்து, முதல்வர் தரப்பிலிருந்து விளக்கமும் வெளியானது. அதில், முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், மாலை நடைபெற உள்ள விழாவில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.