ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு


உயர் நீதிமன்றக் கிளை

மதுரை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் துன்புறுத்தப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட ராணுவவீரரும், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும் இறந்துவிட்ட நிலையிலும் ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லகாமன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சீனியம்மாள். இவர் ஆசிரியையாகப் பணியாற்றினார். இவர்கள், ஆயுதப்படையில் உதவி சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த பைரவ் சிங் என்பவர் வீட்டில், 1976-ல் ரூ.5 ஆயிரம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்தனர்.

வீட்டை காலி செய்வது தொடர்பாக நல்லகாமன் மற்றும் பைரவ்சிங் ஆகியோர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பைரவ் சிங் 1982-ல் புகார் அளித்ததால், நல்லகாமன், அவர் மனைவி சீனியம்மாள் ஆகியோரை சார்பு ஆய்வாளர் பிரேம்குமார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

அப்போது நல்லகாமனை ஆடைகளைக் களைந்தும், சீனியம்மாளை சேலையை அகற்றியும் லாக்கப்பில் அடைத்துவைத்து போலீஸார் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் நல்லகாமனை கைகளில் விலங்கிட்டு, சங்கிலியால் கட்டி வாடிப்பட்டி பேருந்து நிலையம்வரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் 212 பேரிடம் விசாரித்து, 18.4.1982-ல் தாக்கல் செய்த அறிக்கையில், சார்பு ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீஸார் நல்லகாமனையும், அவரது மனைவியையும் கடுமையாக சித்திரவதை செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதன்பேரில் பிரேம்குமார் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 2010-ல் ரத்து செய்தது. இதனால், ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி நல்லகாமன், 2012-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் நல்லகாமனும், சார்பு ஆய்வாளர் பிரேம்குமாரும் இறந்தனர். இதனால் நல்லகாமன் மகன் சுந்தரபாண்டியன் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

“மனுதாரரும், எதிர் மனுதாரரும் இறந்துவிட்டனர். உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து விட்டது. இதனால் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. சந்தேகத்தின் பலனை வழங்கிய வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் போலீஸார் வன்முறையிலும், மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர். அதற்கு போதுமான சாட்சிகள் உள்ளன.

அப்பாவிகள் மீது போலீஸார் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நல்லகாமன் இப்போது உயிருடன் இல்லாததால், அவரது குடும்பத்துக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்”. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

x