இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்ற ஆளுநர் இல்லை!


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“நீட் தேர்வில் இருந்து முழுவிலக்கு பெறுவதே முதன்மையாக நோக்கம்” என்று கூறிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்ற ஆளுநர் இல்லை” என்று காட்டமாக கூறினார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது, ”மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து இந்த சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலைப்பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைப்பதற்காக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி சட்டமன்ற தலைவர்களும் வரவேற்று இந்த தீர்மானத்தை ஒருமனதோடு நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து சட்டமன்ற பேரவை தலைவர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்படும். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் புரிந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், ஆளுநருக்கும் புரியாமல் போனது விநோதமாக உள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்ற ஆளுநர் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை; இதுவே முதன்முறையாக நடைபெற்றுள்ளது. அதற்காக சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட உள்ளது. நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு பெறுவதே முதன்மையாக நோக்கம்” என்று கூறினார்.

x